பேருந்து கட்டணங்கள் குறித்து பிரதமர் வெளியிட்ட தகவல்
பேருந்து கட்டணங்களை வங்கி அட்டைகள் மூலம் செலுத்துவதற்கான முறைமை ஒன்று உருவாக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் பொருளாதார மாதத்திற்கு இணையாக, செயற்கை நுண்ணறிவு தொடர்பான உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படும் எனவும் ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டார். நாடாளுமன்றில் இன்று கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
டிஜிட்டல் பொருளாதார மாதம்
டிஜிட்டல் மயமாக்கலால் வலுவூட்டப்பட்ட நாடாக இலங்கையை மாற்றி அமைக்கும் பயணத்தைத் துரிதப்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு அங்கமாக செப்டம்பர் மாதம் டிஜிட்டல் பொருளாதார மாதமாகப் பெயரிடப்பட்டுள்ளதாகப் பிரதமர் கூறினார்.
2030ஆம் ஆண்டளவில் நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை அமெரிக்க டொலர் 15 பில்லியனாக அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12% ஆக டிஜிட்டல் பங்களிப்பை விரிவுபடுத்துவதற்கான அரசாங்கத்தின் சவாலான இலக்கை அடைவதுடன், டிஜிட்டல் துறையில் ஏற்றுமதியை அமெரிக்க டொலர் 5 பில்லியனாகவும், டிஜிட்டல் துறைசார் தொழிலாளர்களின் எண்ணிக்கையை இரண்டு இலட்சமாகவும் அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவை முதன்மையாகக் கொண்ட துறைகளின் வளர்ச்சிக்கு சிறந்த மையமாக இலங்கையை நிலைநிறுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தற்போது நாடு முழுவதும் டிஜிட்டல் மயமாக்கலுக்குத் தேவையான உட்கட்டமைப்புத் தேவைகள் குறித்து ஆய்வு மற்றும் பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டார்.