நவம்பர் 14இல் இலங்கையை தாக்க வருகிறது புதிய தாழமுக்கம்? ; பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி புதிய தாழமுக்கம் ஒன்று உருவாகுவதற்கான வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப் பீடாதிபதியும் வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இந்தத் தாழமுக்கம் ஆரம்பத்தில் மேற்கு மற்றும் வடமேற்குத் திசையில் நகர்ந்து இலங்கையின் தென்கிழக்குப் பகுதியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது
பொதுமக்களுக்கான எச்சரிக்கை
அதனைத் தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்ந்து இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு கரையோரப் பகுதிகளை ஊடறுத்து தமிழகத்தை நோக்கிச் செல்லும் வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு கரையோரமாக நகரும்போது குறித்த தாழமுக்கம் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் தாக்கம் காரணமாக எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதி முதல் இலங்கையின் பல பகுதிகளிலும் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.
குறிப்பாக நவம்பர் 15, 16 மற்றும் 17ஆம் திகதிகளில் வடக்கு, கிழக்கு, மத்திய, மேற்கு, தெற்கு, வடமேல், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் திரட்டிய மழைவீழ்ச்சியாக 250 மில்லிமீற்றர் வரை மழை கிடைக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கை முழுவதும் கீழைக்காற்றின் செல்வாக்கு காரணமாகவும், இலங்கையின் தெற்குப் பகுதியில் காணப்படும் வளிமண்டலத் தளத்தின் பல்நிலைத் தன்மை காரணமாகவும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் மழை பெய்து வருகின்றது.
இந்த மழை நிலை எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி வரை தொடரக்கூடும் எனவும், குறிப்பாக நவம்பர் 9ஆம் திகதிக்குப் பின்னர் மழையின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா மேலும் தெரிவித்துள்ளார்.
எனவே, எதிர்வரும் நாட்களில் நிலவும் வானிலை மாற்றங்கள் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும், உத்தியோகபூர்வ வானிலை அறிவிப்புகளைத் தொடர்ந்து கண்காணிக்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.