சிங்கப்பூரிலிருந்து நளின் பண்டார அனுமதியின்றி கொண்டு வந்த 39 ட்ரோன்கள் பறிமுதல்
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, உரிய அனுமதிகளைப் பெறாமல் நாட்டிற்குள் கொண்டு வந்ததாகக் கூறப்படும் 39 ட்ரோன்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் மனைவிக்கு கணவன் நிகழ்த்திய கொடூரம் ; வாழைத்தோட்டத்தில் காத்திருந்த ஷாக்
மேலதிக விசாரணை
சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவிடம் குறித்த 39 ட்ரோன்கள் காணப்பட்டதாக சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

குறித்த ட்ரோன்களை நாட்டிற்குள் இறக்குமதி செய்வதற்கு உரிய அனுமதிகளைப் பெற்றிருக்க வேண்டியது அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, ட்ரோன்களை இறக்குமதி செய்வதற்கு இறக்குமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களத்தின் அனுமதிப்பத்திரம் (ICL), இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் (TRC) அனுமதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் (MoD) அனுமதி ஆகியவை அவசியமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த அனுமதிகள் சமர்ப்பிக்கப்படாத நிலையில், 39 ட்ரோன்களையும் தடுத்து வைக்க சுங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அத்துடன், அவற்றை நாட்டிற்குள் கொண்டுவருவதற்குத் தேவையான உரிய அனுமதிப் பத்திரங்களைச் சமர்ப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சந்தன புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்கத் திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.