ஜனாதிபதி ரணில் விடுத்த கடும் உத்தரவு!
தேசியப் பூங்காக்களுக்குள் பதிவு செய்யப்பட்ட சஃபாரி வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் உள் நுழைவதை தடைசெய்து, சுற்றாடல் பாதுகாப்புச் சட்டங்கள் குறித்து புதிய சட்டத்தை உருவாக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய திணைக்களங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதுவரை இந்த தேசிய பூங்காக்களுக்குள் பதிவு செய்யப்பட்ட சஃபாரி வாகனங்களைத் தவிர வேறு எந்த வாகனத்தையும் பிரவேசிக்க அனுமதிக்க வேண்டாம் என ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தனியான சட்டங்கள் உருவாக்க உத்தரவு
மேலும், சிவனொளிபாதமலை வனப்பகுதி மற்றும் சிங்கராஜ வனம் போன்ற சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாப்பதற்கு தனியான சட்டங்களை உடனடியாக உருவாக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்நாட்டில் வனப் பரப்பு 35% ஆகக் குறைந்துள்ளதால் வனப் பரப்பை சேதப்படுத்தும் எந்தவொரு திட்டத்திற்கும் இடமளிக்க வேண்டாம் என்றும் ஆலோசனை வழங்கினார்.
அதோடு யால வில்பத்து மற்றும் ஹோர்டன்தென்ன போன்ற சுற்றுச்சூழலை பார்வையிடச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு மின்சார வாகனங்களின் சேவையை உடனடியாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
இதேவேளை, யால வில்பத்து, ஹோர்டன் சமவெளி போன்ற பூங்காக்களில் சுற்றாடலை பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை உடனடியாக அதிகரிக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.