விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய பணச்சலவை ; இந்தியாவில் கைதான இலங்கை பெண்ணின் வாக்குமூலம்
புலிகள் அமைப்பைச் சேர்ந்த நபர் ஒருவரின் கட்டளைப்படி, மும்பையில் உள்ள வங்கிக் கணக்கு ஒன்றில் இருந்து, அந்த அமைப்பினருக்கு, 42 கோடி ரூபாயை மாற்ற முயன்றதாக சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைதான இலங்கை பெண் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இலங்கையில் இருந்து சுற்றுலா விசாவில், 2019 ஆம் ஆண்டில் சென்னைக்கு சென்ற பெண்ணொருவரே இந்த சம்பவம் தொடர்பில் முன்னதாக கைது செய்யப்பட்டார்.
புலிகள் அமைப்புடன் தொடர்புடைய பணச்சலவை வழக்கில், அந்த பெண்ணை விசாரிக்க அமுலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியதையடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த பெண்ணை விசாரணைக்கு உட்படுத்த சென்னையில் உள்ள விசேட தேசிய புலனாய்வு முகவரக நீதிமன்றம் அமுலாக்க துறைக்கு முன்னதாக அனுமதி அளித்தது.
இரண்டு நாட்கள் சிறையில் வைத்து அவரை விசாரித்ததன் அடிப்படையில் புலிகள் அமைப்பினருக்கு, 42 கோடி ரூபாயை மாற்ற முயன்றதாகக் குறித்த பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.