உலக வங்கியின் முக்கியஸ்தர்களை சந்தித்த கோட்டாபய!
இலங்கையில் தற்போது வங்கியின் உதவியுடன் 17 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
நாட்டின் தற்போதைய கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ள நிதி உதவிகளை வழங்குவதற்காக திட்டங்கள் மீள் கட்டமைப்பு செய்யப்படுவதாக உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் ஃபாரிஸ் ஹடாட் சர்வோஸ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு எட்டப்பட்டதன் பின்னர் உலக வங்கி தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என நம்புவதாக அவர் கூறினார்.
கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்றைய தினம் (29-06-2022) பிற்பகல் உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் (Gotabaya Rajapaksa) இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
[K87BI
இலங்கையின் தற்போதைய நிலைமையை விளக்கிய ஜனாதிபதி, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு உலக வங்கி கடன் உதவிகளை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
விவசாயம், கால்நடைகள், சிறு, மத்திய மற்றும் நடுத்தர கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகளுக்காக பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் குறைந்த வட்டி வீதத்தில் குறித்த கடன் வழங்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
உள்நாட்டு எரிவாயு மற்றும் உரங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய தீர்மானித்துள்ளதாக உலக வங்கியின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
வரி அதிகரிப்பு, டீசல், மண்ணெண்ணெய் மானியம் நீக்கம் ஆகியவை மீனவர்கள் உள்ளிட்ட பல தரப்பினருக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆபத்தில் உள்ள ஏனைய தரப்பினர் குறித்தும் அரசாங்கம் கரிசனை கொண்டுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வரும்போது இந்த விடயங்களை கருத்தில் கொள்ள வேண்டுயேற்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது உலக வங்கியின் இலங்கைக்கான முகாமையாளர் சியோ கந்தா, சிரேஷ்ட செயற்பாட்டு அதிகாரி அசேல திஸாநாயக்க, பயிற்சி முகாமையாளர் கேபி ஜோர்ஜ் அஃப்ராம், தனியார் துறை நிபுணர் பீட்டர் மௌஸ்லி, நிதியியல் நிபுணர் மிக்கேல் டிக்மன், சிரேஷ்ட பொருளாதார நிபுணர் கிஷான் அபேகுணவர்தன, ஜனாதிபதியின் பிரதம செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் ஆலோசகர் அநுர திஸாநாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.