தமிழர் பகுதியில் கர்ப்பிணி பெண் உள்ளிட்ட குடும்பத்திற்கு நேர்ந்த பெரும் துயரம்
மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி தும்பாலை பாலத்திற்கு அருகில் நேற்று(16) இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே சிக்கியுள்ளனர். அதில் சிலர் படுகாயமடைந்துள்ளனர்.

மேலதிக விசாரணை
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் மகப்பேற்றுச் சிகிச்சை பெற்றுவிட்டு, தமது சொந்த முச்சக்கர வண்டியில் மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே விபத்து நேர்ந்துள்ளது.
மகப்பேற்றுச் சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பிய பெண் கூழாவடி தும்பாலை பாலத்திற்கு அருகில் முச்சக்கர வண்டி பயணித்துக் கொண்டிருந்தபோது, பாலையடி வட்டை பகுதியிலிருந்து அதிவேகமாக வந்த கனரக டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கடுமையாகக் காயமடைந்த பெண், உடனடியாகக் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அத்துடன் முச்சக்கர வண்டியில் பயணித்த ஏனையவர்களும் காயமடைந்துள்ளதுடன், முச்சக்கர வண்டியும் முற்றாகச் சேதமடைந்துள்ளது.
விபத்துடன் தொடர்புடைய இரு வாகனங்களும் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.