யாழ். துன்னாலை வாள்வெட்டு சம்பவம் ; வெளியான புதிய திருப்பம்
யாழ்ப்பாணம், வடமராட்சி, துன்னாலை பகுதியைச் சேர்ந்த 33 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை ஜெயசீலன் ஜெனஜதன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.
கடந்த 9ஆம் திகதி இரவு பருத்தித்துறை 1ஆம் கட்டை பகுதியில் நான்கு பேர் கொண்ட கும்பலால் இளம் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை, துன்னாலை தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த இரு குழுக்களுக்கிடையிலான நீண்டகால மோதலின் தொடர்ச்சியாக இடம்பெற்றதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் ஏற்கனவே மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக இருந்த மோட்டார் சைக்கிள் சாரதி நேற்று பருத்தித்துறை பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.
அவரை இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையில், ஒரு நாள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
CCTV காட்சிகளின் அடிப்படையில், நான்கு பேர் மோட்டார் சைக்கிளில் வந்து இருவர் வாள்களுடன் இறங்கி தாக்குதல் நடத்தியமை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இக்கொலைக்கு பழிவாங்கும் நோக்கம் இருந்ததா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.