21 பேரின் தலையைத் துண்டித்து கொன்ற மந்திரவாதி: விசாரணையில் அதிர்ச்சியடைந்த பொலிஸார்
இந்தியா - அந்திர பிரதேசம் மாநிலத்தில் பில்லி, சூனியம், வசியம் ஆகியவற்றை பயன்படுத்தி மந்திரவாதி ஒருவர் 21 பேர் தலையை துண்டித்த சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்த 42 வயதான சத்யம் என்பவர் தன்னை ஒரு மந்திரவாதியாகவும், பில்லி, சூனியம் ஆகியவற்றை போக்கும் நபராகவும் பணக்காரர்களிடம் அறிமுகமாகியுள்ளார்.
இவர் தன்னுடைய மாந்திரீக பூஜையால் அதிர்ஷ்டம், கூடுதலான சொத்துக்கள், பெண்கள் உறவு, பில்லி, சூனியம் போக்குதல் நடைபெறுவதாக கூறி பொதுமக்களை நம்ப வைத்துள்ளார்.
இந்த நிலையில் ஐதராபாத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் திடீரென மாயமானார்.
இது தொடர்பில் அவருடைய மனைவி பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார். பொலிஸார் ரியல் எஸ்டேட் அதிபர் கடைசியாக சந்தித்த நபர்கள் தொடர்பில் விசாரணையில் இறங்கினர்.
இதில், ரியல் எஸ்டேட் அதிபரின் மாமனார் அரசியல் பின்புலத்தில் இருப்பதால் பொலிசாருக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்கப்பட்டது.
ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடினர். அபோது தான், மந்திரவாதி சத்யம் உடன் ரியல் எஸ்டேட் அதிபர் தொடர்பு கொண்டது தெரியவந்தது.
இதனையடுத்து, அப்பாவி பக்தர் போல நடித்து பொலிஸார் அவரிடம் நெருங்கி மந்திரவாதியை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், ரியல் எஸ்டேட் அதிபரிடமிருந்து பணம் மற்றும் நகைகளை பறித்து அவர் கழுத்தை நெரித்துக் கொன்றது தெரியவந்தது.
இதேவேளை, சத்யம் மீது ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மாந்திரீகத்தின் பெயரில் தன்னிடம் வருபவர்களிடம் பணம் மற்றும் நகைகளை பறித்துக் கொண்டு அவர்களின் தலையைத் துண்டித்து கொன்று விடுவதை சத்யம் வழக்கமாக வைத்துள்ளார்.
இதுவரை 21 பேரை சத்யம் கொன்றுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இதேபோல, ஆந்திராவில் தங்களுடைய பிரச்சனையை தீர்க்க வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தலையை வெட்டி கொன்றதாக மந்திரவாதி கூறியுள்ளார்.
இதை கேட்ட பொலிஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கொலை செய்யப்பட்டவர்கள் புதைக்கப்பட்டனரா அல்லது எரிக்கப்பட்டனரா என்பது தெரியவில்லை.
இந்த சம்பவங்களுக்கு கூடுதல் நபர்கள் தொடர்பில் இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகித்துள்ளனர்.
இருப்பினும் கடந்த சில ஆண்டுகளில் காணாமல் போனவர்களின் தகவல்களையும் பொலிஸார் சேகரித்து வருகின்றனர்.