மன்னார் காற்றாலைத் திட்ட விவகாரம் ; ஜனாதிபதி அநுரவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை
மன்னாரில் காற்றாலை திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்கு முன்னர், கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விடுவிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
மன்னார் தீவு பகுதிக்குள் காற்றாலை, கனிம மண் அகழ்வு திட்டங்கள் வேண்டாம் எனும் மன்னார் மக்களின் கூட்டு கோரிக்கையை அடியோடு நிராகரித்து, ஆட்சியாளர்கள் தமது நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பது தொடர்பில் ஆழ்ந்த கவலை அடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் மாவட்டம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும் என்பதால், அதன் இயல்பைக் கெடுக்காமல் பாதுகாப்பதே அவசியம் என அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், மக்களின் கூட்டுக் கோரிக்கையை குழி தோண்டி புதைத்து விட்டு திட்டமிட்டபடி 14 காற்றாலைக்கான பணிகளும் நடைபெறுவதாக வி.எஸ் சிவகரன் தெரிவித்துள்ளார்.
கனிம மணல் அகழ்வு முற்றாக நிறுத்தப்படும் எனக் கூறியபோதும், கனிம மண் அகழ்வுக்குரிய இரண்டு நிறுவனங்களும் தமது செயற்பாட்டைத் தொடர்ந்த வண்ணமே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, மன்னாரின் வளத்தையும் சுரண்டி, மக்களின் வாழ்வியலை கெடுப்பது நியாயமா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நிலையில், இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கூட இதுவரை முறையாக நிவாரணம் கிடைக்கவில்லை என, மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் இதனைத் தெரிவித்துள்ளார்.