நீதிமன்றத்தின் திடீர் முடிவு ; பிரசன்ன ரணதுங்கவின் பயணத் தடை தற்காலிகமாக நீக்கம்
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையைத் தற்காலிகமாக தளர்த்துவதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (23) கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்போது, சந்தேகநபரான பிரசன்ன ரணதுங்க சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, தனது கட்சிக்காரர் மத வழிபாட்டு நடவடிக்கைக்காக இந்தியா செல்ல வேண்டியுள்ளதால், தற்போது நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத் தடையைத் தற்காலிகமாகத் தளர்த்துமாறு கோரிக்கை விடுத்தார்.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சார்பில் ஆஜரான அதன் உதவி பணிப்பாளர் நாயகம் சுலோச்சனா ஹெட்டியாராச்சி, இந்த கோரிக்கைக்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் உடன்படவில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதவான், அடுத்த வழக்குத் தவணை வரை பிரசன்ன ரணதுங்க வெளிநாடு செல்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்டார்.
அதற்கு மேலதிகமாக, பிரசன்ன ரணதுங்கவிற்கு 50 இலட்சம் ரூபாய் மேலதிக சரீரப் பிணை விதித்ததுடன், அவரது பிணையாக இருப்பவர்களின் வெளிநாட்டு பயணங்களைத் தடை செய்யவும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கு விசாரணை மார்ச் மாதம் 27ஆம் திகதி வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
சுற்றுலா அமைச்சின் கீழ் உள்ள 4 நிறுவனங்களின் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட நேரடி மருத்துவக் காப்பீட்டிற்காக, சட்டவிரோதமான முறையில் தனியார் தரகர் நிறுவனம் ஒன்றை நியமித்து, அதன் மூலம் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கு 4,750,828.72 ரூபாய் நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பாக முன்னாள் அமைச்சருக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.