ஊடகங்களின் வெளிப்பாடு ;திருமுறிகண்டி பிள்ளையார் ஆலயத்தில் குவிந்த அரச அதிகாரிகள்!
வரலாற்று சிறப்புமிக்க திருமுறிகண்டிப் பிள்ளையார் ஆலய சூழலில் அமைந்திருக்கின்ற மலசல கூட வசதிகள் மிக மோசமான சுகாதார சீர்கேடுகளுடன் காணப்படுவது தொடர்பாக பொதுமக்களின் முறைப்பாடுகள் மற்றும் ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளை தொடர்ந்து அரச அதிகாரிகள் நேரில் கள விஜயம் செய்துள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை (23) முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு அ.உமாமகேஸ்வரன் தலைமையில் உத்தியோகத்தர்கள் நேரடியாக களவிஜயம் மேற்கொண்டு ஆராயப்பட்டு அதற்கான நிரந்தர தீர்வுகள் தொடர்பாக தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டது.

நிரந்தர தீர்வுகள் தொடர்பாக தீர்மானங்கள்
முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் இந்து பண்பாட்டு நிதியத்தினால் திருமுறிகண்டி பிள்ளையார் ஆலய நிதியுதவியுடன் கடந்த 2024 ஆம் ஆண்டில் திருமுறிகண்டி பிள்ளையார் ஆலய சூழலில் அமைந்துள்ள மலசல கூடங்கள் புனரமைக்கப்பட்டது.
இப்புனரமைப்பு பணிகள் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டதுடன் மலசல கூடங்களினை பராமரிப்பதற்கு கேள்வி நடைமுறையில் தனியார் ஒருவரிற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் மலசல கூட வசதிகள் மிக மோசமான சுகாதார சீர்கேடுகளுடன் காணப்படுவது தொடர்பாக அண்மைக் காலமாக பொதுமக்கள் விசனங்கள் வெளியிட்டிருந்தனர்.
இது தொடர்பாக சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளை தொடர்ந்து இதற்கான நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில் அரச அதிகாரிகளின் கள விஜயம் இடம் பெற்றது.

இதன்போது மலசல கூடங்களை உடனடியாக புனரமைப்பது மலசல கூடங்களை பராமரிப்பதனை மேற்பார்வை செய்வதற்கு திருமுறிகண்டி கிராம சமூகமட்ட அமைப்புக்களின் பங்களிப்பை பெறுதல்
மலசல கூடங்களிற்கான தண்ணீர் வசதியை சுண்ணாம்பு அற்றதாக மாற்றுதல் (Calcium-free water) மலசல கூடங்களை தூய்மையாக வைத்திருப்பதற்குரிய இரசாயணப் பொருட்கள் மற்றும் உபகரணங்களை திருமுறிகண்டி பிள்ளையார் ஆலய நிதியில் வழங்குதல்

பொது மக்கள் மலசல கூடங்களை தூய்மையாக பயன்படுத்துவதற்குரிய அறிவுறுத்தல்களை மும்மொழியில் காட்சிப்படுத்தல் இத்தீர்மானங்களை குறுகிய காலத்தினுள் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தீர்மாணிக்கப்பட்டது.

மேலும் களவிஜயத்தில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் புதுக்குடியிருப்பு பிரதேச சபையியின் கௌரவ தவிசாளர் மாவட்ட இந்துகலாசார உத்தியோகத்தர் புதுக்குடியிருப்பு பிரதேச சபையியின் வருமான உத்தியோகத்தர் தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் திருமுறிகண்டி கிராம சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
