ஆயுதத்தால் ஆட்சியைப் பெற முடியுமா? ; அரசை சாடும் விமல் வீரவன்ச
வன்முறையின் ஊடாக ஆயுதங்களை ஏந்தி அரச பலத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதே தற்போது மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) நிலைப்பாடாகவுள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், மகா சங்கத்தினராகவே இருந்தாலும் அவர்கள் தம்மை தாக்கினால், தாமும் பதில் தாக்குதல் நடத்துவோம் என அமைச்சர் லால் காந்த பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
இதுவே ஜே.வி.பி.யின் உண்மையான முகமாகும். இது இலங்கை என்ற நாடாகும். இந்த நாட்டுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பிரதாயங்கள் உள்ளன என்பதை இந்த அரசாங்கத்துக்கு நினைவுபடுத்துகின்றோம்.

இவ்வாறானவர்களை தொடர்ந்தும் ஆட்சியில் வைத்திருப்பதா அல்லது ஆட்சியிலிருந்து விரட்டியடிப்பதா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும். தமக்கு அரசியல் அதிகாரம் இருப்பதாகவும், ஆனால் அரச அதிகாரம் இல்லை என்றும் லால் காந்த கூறுகின்றார்.
அரச அதிகாரம் என்பது முப்படைகளை தமது ஆதரவாளர்களைக் கொண்டு நிரப்புவதாகும். அதே போன்று நீதிமன்றம், அரச நிர்வாகம் என்பவற்றிலும் கட்சி ஆதரவாளர்களை நியமித்து தனி கட்சி ஆட்சியை நிறுவுவதே அரச அதிகாரமாகும்.
பெற்றுக் கொண்டுள்ள அரசியல் அதிகாரத்தைக் கொண்டு அனைத்தையும் ஜே.வி.பி. மயமாக்குவதற்கான நடவடிக்கைகளே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அரசாங்கத்தின் இந்த எதேச்சதிகார முயற்சிகளை தோற்கடிப்பதற்கு மக்கள் முன்வர வேண்டும். வன்முறையின் ஊடாக ஆயுதங்களை ஏந்தி அரச பலத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதே தற்போது ஜே.வி.பி.யின் நிலைப்பாடாகவுள்ளது.
அவ்வாறு இவர்களால் அரச அதிகாரம் கைப்பற்றப்படும் பட்சத்தில் இந்நாட்டில் மீண்டும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தல் நடத்தப்பட மாட்டாது.
பல கட்சி ஆட்சி முறைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். நாட்டிலுள்ள சகல ஜனநாயக சக்திகளும் இணைந்து இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டும். அரசியல் பேதங்களை துறந்து ஐக்கியத்துடன் ஒன்றிணைய வேண்டும். என்றார்.