இலங்கைக்கு குவியும் பாராட்டுக்கள் ; சர்வதேச நாணய நிதியத்தின் தகவல்
வொஷிங்டனில் நடைபெற்று வரும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் 2026 வசந்தகாலக் கூட்டத் தொடரில் இலங்கை தூதுக்குழுவினர் மிக முக்கியமான ஆலோசனைகளை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தலைமையிலான குழுவினர், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் சிரேஷ்ட தலைவர்களுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையின் பொருளாதார மீட்சி
இந்தநிலையில், இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தைப் பாராட்டியுள்ள சர்வதேச நாணய நிதிய முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் 5 மற்றும் 6-வது மீளாய்வுகளுக்கான உடன்பாட்டை எட்டியதற்காக பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையின் பொருளாதார மீட்சிக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.
எரிபொருள் மற்றும் எரிவாயு இறக்குமதியில் பெருமளவுக்குத் தங்கியிருக்கும் இலங்கை, பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளைப்போன்று பாதிக்கப்படக்கூடிய நிலையிலேயே இருக்கிறது. இருப்பினும் கடந்த மூன்று ஆண்டுகளில் இலங்கை அதன் வரி வருமானத்தை மேம்படுத்துவதில் முன்னேற்றம் கண்டுள்ளது.
எனவே தற்போதைய நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆதரவு வழங்கக்கூடியவாறு இலங்கை ஓரளவுக்கு சிறந்த நிலையிலேயே இருக்கிறது என சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய, பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் மற்றும் சமீபத்திய சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகள் இலங்கைக்குப் பெரும் சவாலாக அமைந்திருப்பதை சர்வதேச நாணய நிதியம் ஏற்றுக்கொண்டுள்ளது.
இருப்பினும், எரிசக்தி விலைகளில் உரிய மாற்றங்களைக் கொண்டு வருமாறும், கொள்கை ரீதியான ஒழுக்கத்தைத் தொடர்ந்து பேணுமாறும் இலங்கை அதிகாரிகளை சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.