மணல் டிப்பருடன் கார் மோதி விபத்து ; பொலன்னறுவை அறுவை சிகிச்சை நிபுணர் உயிரிழப்பு
மின்னேரியா – ஹபரணை பிரதான வீதியில் கார் ஒன்று மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில், பொலன்னறுவை மாவட்ட பொது வைத்தியசாலையில் பணியாற்றிய அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் ரோஹண கமகே (49) உயிரிழந்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை (6) பிற்பகல் சுமார் 3 மணியளவில், ஹத்தே கனுவ என அழைக்கப்படும் ஏழாவது மைல்கல் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மின்னேரியாவிலிருந்து ஹபரணை நோக்கிப் பயணித்த வைத்தியரின் கார், எதிர்த்திசையில் ஹபரணையிலிருந்து மின்னேரியா நோக்கிப் பயணித்த மணல் ஏற்றிய டிப்பர் வாகனத்துடன் மோதியதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த வைத்தியர் உடனடியாக ஹபரணை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது கார் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலன்னறுவை புதிய நகரப் பகுதியில் வசித்து வந்த வைத்தியர் ரோஹண கமகே, இதற்கு முன்னர் மாத்தளை மற்றும் மட்டக்களப்பு வைத்தியசாலைகளிலும் பணியாற்றியுள்ளார்.
அண்மையிலேயே அவர் பொலன்னறுவை வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
இலங்கை சத்திரசிகிச்சை நிபுணர்கள் கல்லூரியும் அவரது மறைவை உறுதிப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.