பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை ; பயிற்சிப் போட்டியில் 142 ஓட்டங்களால் அபார வெற்றி
பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் (PCB) Patrons XI அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று நாள் பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி 142 ஓட்டங்களால் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இஸ்லாமாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து 223 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது.

இதற்குப் பதிலளித்து துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் Patrons XI அணி, 8 விக்கெட்டுகளை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தனது முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 181 ஓட்டங்களைப் பெற்றது. இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு 254 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
எனினும், இலங்கை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய பாகிஸ்தான் Patrons XI அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 111 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன்மூலம் இலங்கை அணி 142 ஓட்டங்களால் அபார வெற்றியைத் தனதாக்கிக் கொண்டது. இலங்கை அணியின் பந்துவீச்சில் கேஷர நுவந்த 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியதுடன், ஈஷான் மலிங்க 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கினர்.
எதிர்வரும் நவம்பர் 9ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இலங்கை – பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கு முன்னதாகப் பதிவுசெய்துள்ள இந்த வெற்றி, இலங்கை அணியின் தயார்படுத்தல்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
பாகிஸ்தான் மண்ணில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரை எதிர்கொள்ளும் இலங்கை அணிக்கு இந்தப் பயிற்சிப் போட்டி சிறந்த ஆட்டத் தயாரிப்பாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.