இலங்கையில் 89 புதிய பேருந்து வழித்தடங்கள் ; அனுமதிப்பத்திரம் வழங்க புதிய நடைமுறை அறிமுகம்
இலங்கையில் பேருந்து போக்குவரத்துச் சேவையை மேலும் விரிவுபடுத்தி, பொதுமக்களுக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் சுமார் 89 புதிய பேருந்து வழித்தட அனுமதிப்பத்திரங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன (Prasanna Gunasena) இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, புதிய பேருந்து வழித்தட அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான தற்போதைய நடைமுறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, பத்திரிகை விளம்பரங்கள் ஊடாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு, தெளிவான மதிப்பீட்டு அளவுகோல்களின் அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படவுள்ளன.

இதன் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் வெளிப்படையான முறையில் தெரிவு செய்யப்பட்டு, புதிய பேருந்து வழித்தட அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன.
புதிய நடைமுறையின் கீழ் எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் சுமார் 89 பேருந்து வழித்தட அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையின் மூலம் நாட்டின் பேருந்து போக்குவரத்துச் சேவையை மேம்படுத்துவதுடன், பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளையும் சிறப்பாகப் பூர்த்தி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.