பிரித்தானியாவில் அரசியல் அதிர்வு ; நாமல் உரைக்கு எதிராகப் போராட்டம்
ஒக்போட் யூனியன் (Oxford Union) அமைப்பில் உறுப்பினர் நாடாளுமன்ற நாமல் ராஜபக்ஷ (Namal Rajapaksa) நிகழ்த்தவிருந்த உரைக்கு எதிராகப் பெருமளவிலான போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தமிழ் அமைப்புகள் அறிவித்துள்ளன.
நாமல் ராஜபக்ச பிரித்தானியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களுக்கு விஜயம் மேற்கொண்டு உரையாற்றவிருந்த நிலையில், பல தமிழ் மாணவர் அமைப்புகள் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் கடும் கண்டனம் வெளியிட்டு வருகின்றன.
இதன் முன்னோட்டமாக, பெப்ரவரி 27 ஆம் திகதி Cambridge Union இல் நடைபெறவிருந்த அவரது உரை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

22-க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் விடுத்த எதிர்ப்பினைத் தொடர்ந்து, தற்போதைய சூழலில் குறித்த தலைப்பில் சமநிலையான விவாதத்தை நடத்த இயலாது என கேம்பிரிட்ஜ் யூனியன் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பெப்ரவரி 25 அன்று ஆக்ஸ்போர்டு யூனியனில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள உரைக்கு எதிராக, 23-02-2026 மாலை 3 மணிக்கு ஆக்ஸ்போர்டு யூனியன் வளாகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு போர்க்கால மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டி, இத்தகைய மேடைகளை வழங்குவது பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக அமைப்புகள் தெரிவித்துள்ளன.
மேலும், 2010ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) ஆக்ஸ்போர்டு யூனியனில் உரையாற்றவிருந்த நிகழ்வும் பாதுகாப்பு காரணங்களால் ரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் தொடர்பில் ஆக்ஸ்போர்டு யூனியன் அல்லது நாமல் ராஜபக்ச தரப்பிலிருந்து இதுவரை மேலதிக அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.