கொழும்பில் நீதித்துறை அதிரடி மாற்றம் ; ஒரு மாதத்திற்குள் 7 புதிய மேல் நீதிமன்றங்கள்
கொழும்பு பிராந்தியத்தில் ஸ்தாபிக்கப்படவுள்ள புதிய ஏழு மேல் நீதிமன்றங்களின் செயற்பாடுகள் எதிர்வரும் ஒரு மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பிரதம நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேனவின் தலைமையில், நீதிமன்ற செயற்பாடுகள் அனைத்தும் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் கூறியுள்ளார்.

அதன்படி, புதிய நீதிமன்றங்களின் செயற்பாடுகளை ஆரம்பிக்கத் தேவையான உட்கட்டமைப்பு மற்றும், ஆளணி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய நீதிமன்றங்களில், பெரும்பாலானவை குற்றவியல் மற்றும் ஊழல் வழக்குகளை விசாரணை செய்யவுள்ளன.
அத்துடன், சிவில் மேல்முறையீட்டு வழக்குகளையும், வணிக வழக்குகளை விசாரணை செய்வதற்கு, தலா 02 நீதிமன்றங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளன.
கொழும்பு புதுக்கடையிலுள்ள 'அதிகரண பியச' கட்டிடத்தில் 05 நீதிமன்றங்களும், கொழும்பு 07, பௌத்தலோக மாவத்தையில் உள்ள இரண்டு முன்னாள் அமைச்சர்களின் இல்லங்களில் மேலும் இரண்டு நீதிமன்றங்களும் அமைக்கப்படவுள்ளன.