மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் அதிகாரியான தந்தை
தனது மூத்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மொனராகலை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (III) பி.யு.பி. மானியம்கமவினால், குறித்த பொலிஸ் சார்ஜன்டின் சேவை கடந்த 11ஆம் திகதி முதல் இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சேவை இடைநிறுத்தப்பட்டவர், தம்பகல்ல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் கே.ஜி. சமந்த ருவன் குமார என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் தனது மூத்த மகளை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகநபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் தாயார் 2021ஆம் ஆண்டு உயிரிழந்த பின்னர் இந்த சம்பவங்கள் இடம்பெற்றதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், வேறு ஒருவருடன் சிறுமி காதல் தொடர்பில் இருந்ததாக கூறி சந்தேகநபர் அவரை தாக்கியதாகவும், அதில் காயமடைந்த சிறுமி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது, தந்தையினால் இடம்பெற்றதாகக் கூறப்படும் துஷ்பிரயோகம் தொடர்பில் வைத்தியரிடம் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து வைத்தியசாலைப் பொலிஸார் சம்பவம் தொடர்பில் தம்பகல்ல பொலிஸாருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் அவர் சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பகல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கிணிகே தலைமையிலான பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.