காலநிலை மாற்றம் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது ; சஜித் பிரேமதாச
காலநிலை மற்றும் வானிலை மாற்றங்கள் குறித்து கவனம் செலுத்துவது மக்களின் நலன் கருதிய கடமையாகும்.
இது பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மட்டுமன்றி, உணவு மற்றும் நீர் பாதுகாப்பிற்கும் மிக அவசியமான ஒன்றாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற காலநிலை மாற்றங்கள் தொடர்பான பேரவையை விளித்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த பேரவையின் இணைத் தலைவர்களாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பேராசிரியர் அபேவிக்ரம ஆகியோர் செயற்படுகின்றனர்.
இது தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விடயம் என்பதால், முன்கூட்டியே திட்டமிட்ட கட்டுப்பாடுகளை நோக்கிச் செல்ல பல்வேறு தரப்பினருடன் பொதுவான இணக்கப்பாட்டை எட்ட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற அமர்வு இடம்பெறும் ஒவ்வொரு மாதமும் இரண்டு வாரங்களுக்குள், இந்த பேரவை ஒரு நாள் கூட வேண்டும்.
இது ஒரு தனிநபரின் பணியல்ல. காலநிலை ஆய்வாளர்கள், அறிஞர்கள் மற்றும் சுயாதீன ஆலோசனைக் குழுக்கள் எனப் பலதரப்பட்டோர் இதில் இணைவதால், கட்சி அரசியல் பேதமின்றி இந்த பேரவை செயற்படுகிறது என்று அவர் கூறினார்.
காலநிலை மாற்றத்தினால் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து மேலும் கலந்துரையாடப்பட வேண்டும்.
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றங்கள் குறித்து கட்சி பேதமின்றி, விஞ்ஞான ரீதியான தரவுகள் மற்றும் தகவல்களை மையமாகக் கொண்டு, பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்னரே அதற்கேற்ப தயாராக இருக்கும் ஒரு நாட்டை உருவாக்குவதே இந்த பேரவையின் முக்கிய நோக்கமாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எல் நினோ (El Niño) மற்றும் லா நினா (La Niña) காலநிலை மாற்றங்கள் குறித்தும், அவை அடுத்தடுத்த பருவ காலங்களில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. எமக்கு அறிமுகமில்லாத காலநிலை மாற்றங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் பேராசிரியர் சம்பத் செனவிரத்ன, பேராசிரியர் புத்தி மாரம்பே, பேராசிரியர் இனோகா குடவிதாரண, கலாநிதி அண்ட்ரூ கீட்டில், ருக்ஷான் ஜயவர்தன, அஞ்சலி வாட்சன், துஷ்யந்த சில்வா உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் பலர் கலந்துகொண்டனர்.