சுற்றுலா பயணிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள விசேட பாதுகாப்பு அறிவுறுத்தல்கள்
சுற்றுலா மற்றும் கேளிக்கைப் பயணங்களை மேற்கொள்பவர்களுக்காக இலங்கை பொலிஸ் விசேட பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
நண்பர்களுடன் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் பயணங்களை எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி பாதுகாப்பாக நிறைவு செய்து வீடு திரும்புமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கமைய, வாகன ஓட்டிகள் போக்குவரத்துச் சட்டங்களை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அதிக வேகத்தில் செலுத்துவதைத் தவிர்த்து, சோர்வு ஏற்படும் போது ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பு குறித்து தெளிவில்லாத நீர்நிலைகளில் குளிப்பதைத் தவிர்க்குமாறும், இயற்கைச் சூழலைக் காக்கும் வகையில் குப்பைகளை உரிய இடங்களில் அகற்றுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், பணம், கைப்பேசி மற்றும் தங்க ஆபரணங்கள் போன்ற பெறுமதிமிக்க பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம் என்றும், பாதுகாப்பாக வீடு திரும்பும் வரை குடும்பத்தினர் காத்திருக்கிறார்கள் என்பதை நினைவில் கொண்டு பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறும் காவல்துறை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.