சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மத்தியில் ஜனாதிபதி சுட்டிக்காட்டிய உண்மை
பொருளாதார நிலைபேற்றுத் தன்மையே, நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையை எதிர்கொள்வதற்கு பலமாக அமைந்தது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், 2025ஆம் ஆண்டு எதிர்பார்த்த வருமான இலக்கை அடைந்து, நாட்டில் பொருளாதார நிலைபேற்றுத் தன்மையை உருவாக்குவதற்கு தற்போது அரசாங்கத்தால் முடிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில், சுங்கத் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, 2022ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொருளாதார வீழ்ச்சிக்கு, நாட்டுக்குத் தேவையான வருமானம் ஈட்டப்படாமை மற்றும் நாட்டுக்கு அவசியமான டொலர்கள் கிடைக்காமை ஆகியவையே காரணமாகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்கால சவால்களை எதிர்கொள்ளக்கூடிய வகையிலும் அரசின் இருப்பு தொடர்பான பொறுப்பை இனங்கண்டு அதன் செயல்பாடுகளைப் பேணவேண்டியதன் அவசியத்தையும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
இந்தநிலையில், புதிய திட்டங்களுடன் ஒன்றிணைந்து பணியாற்றி, 2026ஆம் ஆண்டில் நாட்டை பொருளாதார ரீதியில் வெற்றிக்கு இட்டுச்செல்ல அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.