நல்லூர் பிரதேச சபையில் ஒருமித்த குரல் ; அழைப்பு இல்லையெனில் பங்கேற்பில்லை
நல்லூர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படாவிடின், அக்கூட்டங்களை முற்றாகப் புறக்கணிப்பதென நல்லூர் பிரதேச சபை ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.
இன்று நடைபெற்ற பிரதேச சபைக் கூட்டத்தின் போது தவிசாளர் ம. மயூரனினால் கொண்டு வரப்பட்ட இந்தத் தீர்மானத்திற்கு சபையில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் தமது ஆதரவை வழங்கினர்.
பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் தவிசாளர், உப தவிசாளர் மற்றும் ஏனைய கட்சிகளைச் சேர்ந்த இரு உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே, இந்த மட்டுப்படுத்தப்பட்ட அழைப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாகத் தவிசாளர் மயூரன் கூறுகையில்,“அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் என்பது கட்சிகளின் செயற்பாடுகள் தொடர்பான ஒன்றல்ல.
இது மக்களின் குறைகளைத் தீர்க்கும் மற்றும் பிரதேச அபிவிருத்தியைத் தீர்மானிக்கும் இடமாகும்.
மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களும் இதில் பங்கேற்பது அவசியமானது.
அப்போதுதான் ஒவ்வொரு உறுப்பினரும் தங்கள் பிரதேசம் சார்ந்த பிரச்சினைகளைத் தெரிவித்து, எடுக்கப்படும் முடிவுகளுக்கு வலுச் சேர்க்க முடியும். கட்சி அடிப்படையில் பிரதிநிதிகளை அழைப்பதைத் தவிர்த்து, அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட வேண்டும்.
அவ்வாறு இன்றி, கண்துடைப்பிற்காக நடத்தப்படும் கூட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் தவிசாளர், உப தவிசாளர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் அதனைப் புறக்கணிப்போம் என அவர் தெரிவித்தார்.
தவிசாளரின் இந்த முன்மொழிவைச் சபையில் இருந்த அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டதுடன், பிரதேசத்தின் நலனுக்காகவும் மக்கள் பிரதிநிதிகளின் உரிமைக்காகவும் இந்தத் தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றினர்.