பேருந்தில் பயணிகளுக்கு அதிர்ச்சி ; குடிபோதையில் கடமையாற்றிய நடத்துநரினால் பரபரப்பு
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தில் குடிபோதையில் கடமையாற்றிய நடத்துநர் ஒருவர், பயணிகளின் முறைப்பாட்டைத் தொடர்ந்து சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலாங்கொடை - ராசகல வீதியில் பயணித்த அரச பேருந்தின் நடத்துநர் போதையில் இருப்பதாகப் பயணிகள் சந்தேகித்துள்ளனர்.
இது குறித்து உடனடியாக பலாங்கொடை பிரதான போக்குவரத்து சபை அலுவலகத்திற்குத் தகவல் வழங்கப்பட்டது.

தகவலின் அடிப்படையில், பலாங்கொடை போக்குவரத்துச் சபை மேலாளர் தர்மஸ்ரீ ஹரிச்சந்திரவின் உத்தரவின் பேரில் விசேட குழுவொன்று குறித்த பேருந்தை இடைமறித்துப் பரிசோதனை செய்தது.
இதன்போது, நடத்துநர் மதுபோதையிலிருந்தமை உறுதி செய்யப்பட்டது.
அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்ட குறித்த நடத்துநர், பலாங்கொடை பிரதான மருத்துவமனையின் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டு, அங்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவர் மது அருந்தியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.
இச்சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த போக்குவரத்து சபை முகாமையாளர் தர்மஸ்ரீ ஹரிச்சந்திர, "பயணிகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு குறித்த நடத்துநர் உடனடியாகச் சேவையிலிருந்து இடைநிறுத்தப்படுவார் எனவும், அவர் மீது மேலதிக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும்," எனவும் தெரிவித்தார்.
மேலும், பலாங்கொடை போக்குவரத்துச் சபை அல்லது பேருந்து நிலையத்திலிருந்து பயணிக்கும் பொதுமக்கள், பேருந்துகளில் தமக்கு ஏற்படும் அசௌகரியங்கள் அல்லது ஊழியர்களின் முறையற்ற நடத்தைகள் குறித்து 0452287281 அல்லது 0776188875 என்ற தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்யுமாறு கோரப்பட்டுள்ளனர்.