ஜனாதிபதி தேர்தலில் அமுலாகும் தடை - அரசியல்வாதிகளுக்கு கட்டுப்பாடு
ஜனாதிபதி தேர்தலில் பொலித்தீன் பாவனையை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பதற்காக நேற்று அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
தேர்தல் ஆணைய தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க உள்ளிட்ட அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
பிரசார நடவடிக்கை
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பொலித்தீன் பாவனையின்றி பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவிக்க வேண்டியதன் அவசியத்தை சுற்றாடல் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகிர்த்தி சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக வேட்பாளர்களுக்கு தெரிவிக்கும் பணியில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
பிரச்சார நடவடிக்கைகளில் அதிகளவான பொலித்தீன் பயன்படுத்தப்படுவதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு, அவற்றை அகற்றுவதற்கு அரசாங்கம் பாரிய செலவை சுமக்க நேரிடும் என சுற்றாடல் அமைச்சின் செயலாளர் இந்த கலந்துரையாடலில் சுட்டிக்காட்டினார்.
அரசியல்வாதிகளுக்கு தடை
அத்துடன், தேர்தல் காலத்தில் பொது சொத்துக்களை முறையற்ற விதத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக் கூடாது என்பது குறித்தும் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.
வளர்ச்சிப் பணிகளை வழக்கம்போல் மேற்கொள்ள வேண்டும். அபிவிருத்தி திட்டங்கள் திறக்கும் நடவடிக்கையில் அரசியல்வாதிகள் ஈடுபடக் கூடாது என்றும் தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.