கூர்மையான ஆயுதங்களால் தாக்கிகொல்லப்பட்ட நபர் ; போதைப்பொருளுடன் பிடிபட்ட இளைஞர்கள்
தெஹிவளை - ஓபன் வீதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்கள் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கூர்மையான ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
07 ஆம் திகதி முச்சக்கரவண்டியில் வந்த குழுவொன்று வீடொன்றிலிருந்த நபர் மீது கூர்மையான ஆயுதங்களால் தாக்குதல் நடத்திப் கொலை செய்திருந்தது.

தீவிர விசாரணை
இச் சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் நேற்று புதன்கிழமை (16) அங்குலானை, கந்தவல வீதி மற்றும் கல்கிஸ்ஸ பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது இக் குற்றத்தை மேற்கொண்ட நபர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டு, கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 17 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 04 வாள்கள் உள்ளிட்ட 05 கூர்மையான ஆயுதங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் கல்கிஸ்ஸ மற்றும் அங்குலானை பகுதிகளைச் சேர்ந்த 23, 24 மற்றும் 30 வயதுடையவர்களாவர்.
மேலும், இச் சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.