ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் பெற சென்றவர் அங்கேயே உறக்கம்; பின்னர் நடந்த சம்பவம்
ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் பெற சென்ற நபர் ஒருவர் அங்கேயே உறங்கிய நிலையில் அவரது கைத்தொலைபேசிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன திருடப்பட்டுள்ள சம்பவம் கொழும்பில் பதிவாகியுள்ளது.
கொழும்பு - நுகேகொட விஜேராம சந்தியில் அமைந்துள்ள ஏ.டி.எம் பணம் பெறும் இடத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கையடக்க தொலைபேசி மோட்டார் சைக்கிள் களவு
பாதுக்க மலகல பிரதேசத்தில் வசிக்கும் 45 வயதுடைய வர்த்தகர் ஒருவர் விருந்தொன்றில் கலந்து கொண்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, அதிகாலை 2.30 மணியளவில் நுகேகொட விஜேராம சந்திக்கு அருகில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்க சென்றுள்ளார்.
மோட்டார் சைக்கிளை ஏ.டி.எம் இயந்திரம் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் நிறுத்திவிட்டு, உள்ளே சென்று அட்டையை இயந்திரத்தில் காட்டிய பின், பின் குறியீட்டை சரியாக உள்ளிட முடியாததால், அட்டை இயந்திரத்தில் சிக்கியமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
அட்டை வெளியே வரும் வரை காத்திருந்த வர்த்தகர், தன்னையறியாமல் அதிகாலை 5.30 மணி வரை அங்கேயே உறங்கியுள்ளார். கண் முழித்து பார்த்த போது தனது 2 கையடக்க தொலைபேசிகள் மற்றும் மோட்டார் சைக்கிளும் காணாமல் போயிருந்தமை தெரியவந்துள்ளது.
இதையடுத்து மிரிஹான பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டிற்கமைய, பொலிஸார் சீசீடீவி கமராக்களை சோதனையிட்டுள்ளனர்.
அங்கு இருவர் கையடக்க தொலைபேசி மற்றும் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.