உயிருக்கு போராடிய நபர் ; யாழ் வைத்தியசாலையின் ஈவிரக்கமற்ற செயல்!
யாழ். வடமராட்சி கிழக்கு பொதுச் சந்தையில் திடீரென மயங்கி விழுந்து உயிருக்கு போராடிய நபரை கொண்டு செல்வதற்கு மருதங்கேணி வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி உதவி மறுக்கப்பட்டுள்ளதாக நபர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வைத்தியர் தூக்கம்; நோயாளர் காவு வண்டி தர மறுப்பு
வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் அமைந்திருக்கின்ற பொதுச் சந்தையில் காய்கறிகளை வாங்குவதற்காக நபர் ஒருவர் இன்று(7) காலை வருகை தந்துள்ளார்.
காய்கறிகளை கொள்வனவு செய்து கொண்டிருக்கின்ற பொழுது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மயங்கி கீழே விழுந்த நபருக்கு தலையில் காயம் ஏற்பட்டு இரத்தம் வடிந்து ஓடியது.
இந்நிலையில் சந்தையில் இருந்த பொதுமகன் ஒருவர் உடனடியாக அருகில் உள்ள மருதங்கேணி வைத்தியசாலைக்கு சென்று சம்பவத்தை எடுத்து கூறியதுடன் நோயாளர் காவு வண்டியையும் உதவிக்கு அழைத்துள்ளார்.
மருதங்கேணி வைத்தியசாலையில் காணப்பட்ட நோயாளர் காவு வண்டி சாரதியிடம் விடயத்தை தெரியப்படுத்தியவேளை நோயாளர் காவு வண்டி விட முடியாது என்றும் வைத்தியர் தூங்குவதாகவும் தெரிவித்திருந்தார்.
எனினும் வைத்தியரை ஒருமுறை கேட்டு சொல்வதாக தெரிவித்தார். இந்நிலையில் உயிருக்கு போராடிய நபரை காப்பாற்றுவதற்காக 1990 இலக்கத்திற்கு அழைத்து நோயாளர் காவு வண்டியை வரவழைத்ததாகவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது
அண்மைக்காலமாக மக்கள் மருத்துவ தேவைகளை பெறுவதில் மருதங்கேணி வைத்தியசாலையில் தொடர்ந்து சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் உயிருக்கு போராடிய நபரை நோயாளர் காவு வண்டி இருந்தும் அதனை கொடுத்து உதவாத மருத்துவமனை எதற்கு என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.