பட்டினியாலும் மக்கள் சாகும் நிலை ஏற்படும்! ரோஹினி குமாரி விஜேரத்ன
வர்த்தகர்கள் தாம் விரும்பிய விலைக்கு பொருட்களை விற்பனை செய்வார்களாயின் அரசாங்கமும் அமைச்சரவையும் எதற்கு? அத்தியாவசிய பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை உறங்கிக் கொண்டிருக்கிறது.
நாட்டில் இதே நிலைமை தொடருமாயின் கொரோனா தொற்றினால் மாத்திரமின்றி மக்கள் பட்டினியால் சாகும் நிலைமையும் ஏற்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன (Rohini Kumari Wijerathna) தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (29) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அத்தியாவசிய பொருட்களின் விலைகளானது தற்போதும் சடுதியாக அதிகரித்துச் செல்கிறது. இலங்கையின் வருடாந்த சீன இறக்குமதி 3 இலட்சம் மெட்ரிக் தொன் ஆகும். ஆனால் அரசாங்கத்தினால் இறக்குமதி வரி சலுகை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் 6 இலட்சத்து 50, 000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டது.
இதனால் அரசாங்கத்திற்கு ஒரு கிராம் சீனிக்கு 49.75 ரூபா வரி வருமானம் குறைவடைந்தது. மொத்தமாக 1,590 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டது. அதன் பின்னர் கடந்த 3 மாதங்களாக சீனி இறக்குமதி செய்யப்படவில்லை.
அவ்வாறிருக்க தற்போது ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு விலைகளில் சீனி விற்பனை செய்யப்படுவது எவ்வாறு? வரிகுறைப்பின் போது இறக்குமதி செய்யப்பட்ட சீனியின் விலை எதற்காக சாரமாரியாக அதிகரிக்கப்படுகிறது? வரி சலுகையின் மூலம் நுகர்வோருக்கு நன்மை கிடைத்ததா? நாட்டில் இவ்வாறான நிலைமை காணப்படுகின்றபோது நுகவர்வோர் அலுவல்கள் அதிகாரசபை நித்திரையிலுள்ளது என்றார்.