யாழ். இணுவிலில் மதுபானசாலையை அகற்றக் கோரி மக்கள் போராட்டம்!
யாழ்ப்பாணம் – இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள மதுபானசாலையை உடனடியாக அங்கிருந்து அகற்றக் கோரி, பிரதேச மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டனப் போராட்டம் இன்று காலை இடம்பெற்றது.
இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள குறித்த மதுபானசாலைக்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, “எமது கிராமத்தை மதுபோதையில் இருந்து காப்பாற்றுவோம்” என்ற பிரதான கோஷம் முன்வைக்கப்பட்டதுடன், மதுபானசாலையை உடனடியாக அகற்ற வேண்டும் என போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் வலியுறுத்தினர்.
மதுபானசாலை அமைந்துள்ள பகுதியில் பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் குடியிருப்புகள் காணப்படுவதால், இதனால் சமூக ரீதியான பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனவும் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.
குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மீது மதுபானப் பாவனையின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் எனவும், கிராமத்தின் சமூகச் சூழலைப் பாதுகாக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அத்துடன், மக்களின் எதிர்ப்பையும் சமூகத்தின் நலனையும் கருத்திற்கொண்டு குறித்த மதுபானசாலையின் அனுமதியை மறுபரிசீலனை செய்து, அதனை அங்கிருந்து அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.
இந்தக் கண்டனப் போராட்டத்தில் பிரதேச மக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.