தரமற்ற தலைக்கவசங்களை விற்பனை செய்த நிறுவனத்திற்கு அபராதம்
தரமற்ற மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களை விற்பனைக்காகக் காட்சிப்படுத்தியிருந்த கொழும்புப் பகுதியிலுள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றிற்கு 200,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
புதுக்கடை இலக்கம் 05 பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் கொழும்பு மாவட்ட செயலகத்தின் விசாரணை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, கொழும்பு 10, ஜயந்த வீரசேகர மாவத்தையில் அமைந்துள்ள இந்த நிறுவனத்திலிருந்து SLS 517 தரச்சான்று முத்திரை இல்லாத LSS ரக மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த தலைக்கவசங்கள் 1,800 ரூபா விலையில் விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரதிவாதியான நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நீதிமன்றம் 200,000 ரூபா அபராதத்தை விதித்துள்ளது.