சீரற்ற வானிலையால் 12 உயிரிழப்பு; 10,311 பேர் பாதிப்பு!
இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் 10,311 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உத்தியோகபூர்வ தகவல்களின் அடிப்படையில், நாடளாவிய ரீதியில் 21 மாவட்டங்களில் உள்ள 206 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மொத்தமாக 2,826 குடும்பங்களைச் சேர்ந்த 10,311 பேர் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 25 பேர் காயமடைந்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீடுகளுக்கான சேதங்கள் தொடர்பில், 28 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளதுடன், 1,807 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது 3 பாதுகாப்பு நிலையங்களில் 23 குடும்பங்களைச் சேர்ந்த 67 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், அதிகாரிகளால் வெளியிடப்படும் வானிலை எச்சரிக்கைகள் மற்றும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.