யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல்!
யாழ்ப்பாணம், கொக்குவில் இந்துக் கல்லூரியில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (24) நடைபெற்றது.
கொக்குவில் இந்துக் கல்லூரியின் மைதான நுழைவாயிலுக்கு முன்பாக இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட யுத்த சூழ்நிலையின்போது, கொக்குவில் மற்றும் ஆனைக்கோட்டைப் பகுதிகளைச் சேர்ந்த பல பொதுமக்கள் பாதுகாப்புத் தேடி கொக்குவில் இந்துக் கல்லூரியில் தஞ்சமடைந்தனர்.
1987ஆம் ஆண்டு ஒக்டோபர் 24ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலில், பாடசாலை வகுப்பறைகளில் தங்கியிருந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அந்தக் காலப்பகுதியில் நிலவிய சூழ்நிலை காரணமாக, உயிரிழந்தவர்களின் உடலங்கள் கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.
உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.