குரங்கை தொடர்ந்து மயில், முள்ளம்பன்றி, மர அணிலும் வெளிநாடுகளுக்கு!
குரங்கு மட்டுமல்ல மயில், முள்ளம்பன்றி, மர அணில் உள்ளிட்டவற்றையும் வெளிநாடுகளுக்கு வழங்குவது பற்றி ஆராயவுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.
இலங்கை குரங்குகளை சீனாவில் உள்ள தனியார் மிருகக்காட்சி சாலைகளுக்கு அனுப்புவது தொடர்பில் யோசனை அடுத்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்கப்படும் என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
விவசாயத்துக்கு பேரழிவு
விவசாயத்துக்கு பேரழிவை ஏற்படுத்தும் குரங்குகளை கட்டுப்படுத்துமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். மாற்று வழிகள் பற்றி நாம் தேடி பார்த்தோம். கொல்ல முடியாத நிலையும் உள்ளது.
எனவேதான் அவற்றை வெளிநாட்டுக்கு அனுப்புவது பற்றி ஆராயப்பட்டது. இது தொடர்பில் சீன தனியார் நிறுவனமொன்றே கோரிக்கை விடுத்தது. மேலும் சில நாடுகளும் கோரியுள்ளன.
எனவே, கொல்வதைவிட இவ்வாறு வழங்குவது ஏற்புடையதுதானே? என கூறிய அமைச்சர் , இதற்காக குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் தீர்மானத்துக்கமையவே நடவடிக்கை இடம்பெறும் எனவும் கூறினார்.
மயில், முள்ளம்பன்றி, மர அணில் உள்ளிட்டவற்றையும் வெளிநாடுகளுக்கு வழங்குவது பற்றி ஆராயவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.