நெஞ்செரிச்சல் என நினைத்து மருத்துவமனை சென்ற பெண் ; உணவுக்குழாயில் உயிருடன் இருந்த ஒட்டுண்ணிப் புழு
அடிக்கடி ஏற்படும் நெஞ்செரிச்சல் காரணமாக மருத்துவமனைக்குச் சென்ற பெண்ணொருவரின் உணவுக்குழாயில் உயிருடன் இருந்த பெரிய ஒட்டுண்ணிப் புழுவை மருத்துவர்கள் எண்டோஸ்கோபி பரிசோதனையின்போது கண்டறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பெண்ணுக்கு நீண்டகாலமாக நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி போன்ற உபாதைகள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, அவர் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது மருத்துவர்கள் மேற்கொண்ட எண்டோஸ்கோபி பரிசோதனையில், அவரது உணவுக்குழாயின் உள்ளே உயிருடன் ஊர்ந்து கொண்டிருந்த பெரியதொரு ஒட்டுண்ணிப் புழு கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மருத்துவக் குழுவினர் எண்டோஸ்கோபி கருவியின் உதவியுடன் குறித்த புழுவை வெற்றிகரமாக வெளியே அகற்றியுள்ளனர்.
மருத்துவர்கள் அடையாளம் கண்ட இந்தப் புழு, Ascaris lumbricoides எனப்படும் உருளைப் புழு வகையைச் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த ஒட்டுண்ணிகள் பொதுவாக மனிதர்களின் சிறுகுடலில் வாழ்வதுடன், வளர்ந்த புழுக்கள் சுமார் 20 முதல் 35 சென்டிமீட்டர் வரை நீளமடையக்கூடும்.
அசுத்தமான மண், சுத்தமற்ற உணவு மற்றும் மாசுபட்ட நீர் மூலம் இந்தப் புழுக்களின் முட்டைகள் மனித உடலுக்குள் நுழையலாம்.
பின்னர், அவை குடலில் வளர்ச்சியடைகின்றன. சில சந்தர்ப்பங்களில், வளர்ந்த புழுக்கள் வயிற்றின் மேற்பகுதி மற்றும் உணவுக்குழாய் நோக்கி நகரக்கூடும். எனினும், நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன.
நெஞ்செரிச்சல் இருப்பதால் ஒட்டுண்ணித் தொற்று ஏற்பட்டுள்ளது எனக் கருத முடியாது.
தொடர்ச்சியான அல்லது தீவிரமான அறிகுறிகள் காணப்பட்டால் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.
இந்தச் சம்பவம் தொடர்பான இடம், பெண்ணின் வயது மற்றும் மருத்துவமனையின் பெயர் உள்ளிட்ட மேலதிக விபரங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.