இலங்கையில் போதைப்பொருள் குற்றங்களுக்காக 9,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள், சிறுவர்கள் கைது
கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் ஓராண்டு காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சோதனைகளின் போது 9,000 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மற்றும் இளைஞர், யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 8 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களும் அடங்கியுள்ளமை மிகுந்த கவலையளிக்கும் விடயமாகும் எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியாட்சகருமான எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் குற்றச்சாட்டுகள்
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்: "உலக சிறுவர் தினத்தை நாம் கொண்டாடும் இந்தத் தருணத்தில், மிகவும் மனவருத்தத்துடன் இத்தகவலைப் பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது.
2025 ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் நேற்று வரை 8 வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்ட 9,105 சிறுவர்களும் இளைஞர், யுவதிகளும் பல்வேறு போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 8,932 சிறுவர்களும் (ஆண்கள்), 173 இளம் பெண்களும் அடங்குவர். அத்துடன் 8 முதல் 14 வயதுக்குட்பட்ட 11 சிறுவர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்" என அவர் மேலும் குறிப்பிட்டார்.