நடுவானில் விமானிகளிடையே கத்திக்குத்து ; 174 உயிர்களை காப்பாற்ற 6 வயது சிறுமியும் காரணம்? வெளியான அதிர்ச்சி தகவல்
ஃப்ளைதுபாய் விமானம் சதி முயற்சியில் பயணிகள் பாதுகாக்கப்பட்டதற்கு 6 வயது சிறுமியும் காரணம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிற்கு செப்டம்பர் 30ம் திகதி காலை 174 பயணிளுடன் சென்ற விமானத்தில் சக விமானி ஒருவர், இந்திய விமானி ஸ்மித் மச்சாரைக் கத்தியால் குத்தினார்.

06 வயது சிறுமி
கத்திக்குத்தால் ரத்த வெள்ளத்தில் இருந்தபோதும், தாக்குதலுக்குள்ளான விமானி, சாதூர்யமாக செயல்பட்டு விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கி அனைத்து பயணிகளின் உயிரையும் காப்பாற்றினார்.
இந்த நிலையில், விமானி ஸ்மித் மச்சாரை சக விமானியின் தாக்குதலில் இருந்து காப்பாற்றப்பட்டதற்கு 6 வயது சிறுமி ஒருவரும் காரணம் எனத் தெரிய வந்துள்ளது.
விமானம் வானில் பறந்து கொண்டிருந்தபோது நினா (6) என்ற சிறுமி, விமானத்தின் கழிப்பறையில் இருந்துள்ளார். அவரின் தந்தை, விமானத்தின் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார்.
இதனிடையே, கழிப்பறைக்குள் நினா அலறுவதைக் கேட்ட சிறுமியின் தந்தை, அவரை மீட்டபோது, அப்பா, நாம் சாக விரும்பவில்லை என்று சிறுமி கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, விமானிகளின் அறைக்குள் சிறுமியின் தந்தை நுழைந்தார். அவர் நுழையும்போதுதான் விமானி ஸ்மித் மச்சார் கத்திக்குத்தி தாக்குதலுக்குள்ளாகி ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டார்.
இதனையடுத்து, சிறுமியின் தந்தையுடன் மேலும் இருவர் சேர்ந்து தாக்குதல் நடத்திய ஆயுதமேந்திய விமானியை கட்டிப் போட்டனர்.
விமானி ஸ்மித் மச்சார் தாக்குதலுக்குள்ளாகி ரத்த வெள்ளத்தில் கிடந்தபோதிலும், விமானத்தில் பயணித்த பணியில் இல்லாத வேறு விமானிகளுடன் சேர்ந்து விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.