இலங்கை சாரதிகளின் கவனத்திற்கு ; நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ள முறைமை
சாரதிகளின் வீதி ஒழுக்கத்தை மேம்படுத்தவும், வீதி விபத்துகளை பெருமளவில் குறைக்கவும் இலக்குவைத்து, 'சாரதிகளுக்கான புள்ளி இழப்பு முறைமை' (De-merit system) அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் முழுமையாக அமல்படுத்தப்படும் என போக்குவரத்து பொறுப்பிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் அதிபர் W.P.J. சேனாதீர ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இந்த புள்ளி இழப்பு முறைமையை வெற்றிகரமாகச் செயற்படுத்துவதற்காக இலங்கை பொலிஸ், போக்குவரத்து அமைச்சு, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) மற்றும் அரச தகவல் திணைக்களம் (GovTech) உள்ளிட்ட பல நிறுவனங்கள் கூட்டாக இணைந்து பணியாற்றி வருகின்றன.

சட்ட விதிகள்
அத்துடன், இதற்கான தொழில்நுட்ப வடிவமைப்புகளை சிறப்பு நிபுணர் குழுவொன்று தற்போது மேற்கொண்டு வருகிறது.
தற்போது இத்திட்டம் ஒரு முன்னோடித் திட்டமாகச் செயற்படுத்தப்பட்டு வருவதுடன், அபராதம் செலுத்தும் சாரதிகள் தமது ஸ்மார்ட்போன் மூலம் தங்களின் தற்போதைய புள்ளி விவரங்கள் மற்றும் குறைக்கப்பட்ட புள்ளிகளை அறிந்துகொள்ளக்கூடிய சோதனை முறைமை நடைமுறையிலுள்ளது.
மேலும், இத்திட்டத்தை சட்டரீதியாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சட்டக் குழுவொன்றின் மூலம் தற்போதைய சட்ட விதிகளும் உள்ளடக்கங்களும் இறுதிப்பிழை திருத்தப்பட்டு, திறனாய்வு செய்யப்பட்டு வருகின்றன.
நடுவானில் விமானிகளிடையே கத்திக்குத்து ; 174 உயிர்களை காப்பாற்ற 6 வயது சிறுமியும் காரணம்? வெளியான அதிர்ச்சி தகவல்
இந்த முறைமை முழுமையாக அமல்படுத்தப்படுவதன் மூலம் சாரதிகள் மத்தியில் சுய ஒழுக்கமும், பொறுப்புணர்வும் இயல்பாகவே உருவாகும்.
புள்ளிகள் இழக்கப்படுவதைத் தவிர்க்க சாரதிகள் வீதி விதிகளை மதித்து பொறுமையுடன் வாகனங்களைச் செலுத்துவார்கள் என்பதால், நாட்டில் ஏற்படும் கொடிய வீதி விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைக் பெருமளவில் கட்டுப்படுத்த முடியும் என்றும் பிரதி பொலிஸ் அதிபர் W.P.J. சேனாதீர மேலும் சுட்டிக்காட்டினார்.