நாமல் ராஜபக்சவை மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்த உத்தரவு
கிரிஷ் நிறுவனத்துடனான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் , நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (06) உத்தரவிட்டுள்ளார்.
கிரிஷ் நிறுவன கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் கடந்த நவம்பர் 03ஆம் திகதி பிணை வழங்கப்பட்ட போதிலும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான எயார்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பான மற்றுமொரு வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால் அவர் தொடர்ந்தும் சிறைச்சாலையில் உள்ளார்.

இந்நிலையில், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில், நாமல் ராஜபக்சவும் கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தனவும் இன்று சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, ஜானகி சிறிவர்தனவை எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனினும், கிரிஷ் வழக்கில் பிணை வழங்கப்பட்ட நாமல் ராஜபக்ச, எயார்பஸ் விமானக் கொள்வனவு விவகாரம் தொடர்பில் கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் கடந்த ஒக்டோபர் 28ஆம் திகதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான எயார்பஸ் விமானக் கொள்வனவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 100 மில்லியன் ரூபா இலஞ்சத்தைப் பெற்றுக்கொண்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு உள்ளிட்ட 24 குற்றச்சாட்டுகள் இந்த வழக்கில் உள்ளடங்குகின்றன.