வர்த்தக நடவடிக்கைகளுக்கு ‘One TRADE’ கட்டமைப்பு ஊடாக டிஜிட்டல் சேவை
இலங்கையின் இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் மீள் ஏற்றுமதி நடவடிக்கைகளுக்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் அனுமதிகளை டிஜிட்டல் முறையில் நிர்வகிப்பதற்கான புதிய ஒழுங்குவிதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. டிஜிட்டல் பொருளாதார அமைச்சராகச் செயற்படும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், 2006ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டத்தின் கீழ் இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த நவம்பர் 5ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த ஒழுங்குவிதிகள் மூலம், தேசிய வர்த்தகத்திற்கான ஒரே சாளரக் கட்டமைப்பான (National Single Window for Trade) முறைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
One TRADE புதிய டிஜிட்டல் கட்டமைப்பு
One TRADE எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் கட்டமைப்பின் ஊடாக, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய விண்ணப்பங்கள், பிரகடனங்கள், ஆவணங்கள் மற்றும் ஏனைய தகவல்களை மின்னணு முறையில் சமர்ப்பிக்க முடியும்.

அத்துடன், சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் குறித்த ஆவணங்களைப் பரிசீலித்தல், அங்கீகரித்தல் அல்லது நிராகரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் நடைமுறையிலுள்ள சட்டங்களுக்கு அமைவாக டிஜிட்டல் முறையில் முன்னெடுக்க முடியும்.
GovTech Sri Lanka (Pvt) Ltd நிறுவனம் இந்தக் கட்டமைப்பின் அங்கீகரிக்கப்பட்ட செயற்பாட்டு நிறுவனமாகப் பெயரிடப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை சுங்கத் திணைக்களம், இலங்கை துறைமுக அதிகாரசபை, தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் இலங்கை தேயிலைச் சபை உள்ளிட்ட ஆறு அரச நிறுவனங்கள் இதில் பங்கேற்கும் நிறுவனங்களாகப் பெயரிடப்பட்டுள்ளன.
குறித்த வர்த்தமானி அறிவித்தலின்படி, தேயிலை, தேங்காய் மற்றும் தேங்காய் சார்ந்த உற்பத்திப் பொருட்கள் உள்ளிட்டவற்றுக்குரிய 124 HS வகைப்பாட்டு இலக்கங்களைக் கொண்ட பொருட்கள் இந்தப் புதிய ஒழுங்குவிதிகளுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும், One TRADE கட்டமைப்பின் ஊடாகச் சமர்ப்பிக்கப்படும் மின்னணு ஆவணங்கள், அவை மின்னணு வடிவில் உள்ளன என்ற ஒரே காரணத்திற்காக அவற்றின் சட்ட அங்கீகாரத்தை மறுக்க முடியாது என்றும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.