நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை மீறிய 3 தனியார் நிறுவனங்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை மீறிய கொழும்பைச் சேர்ந்த மூன்று தனியார் நிறுவனங்களுக்கு கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றம் மொத்தம் 300,000 ரூபாய் தண்டப்பணம் விதித்துள்ளது.
பயண வழிகாட்டிகளைப் படி நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் தொடரப்பட்ட சட்ட நடவடிக்கையினையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அபராதம்
விலைகளைக் காட்சிப்படுத்தத் தவறியமை மற்றும் இறக்குமதியாளர் விபரங்கள், அதிகபட்ச சில்லறை விலை போன்ற கட்டாயத் தகவல்கள் இன்றி இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்தமை போன்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தலா 100,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி மற்றும் கொழும்பு 03 ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள வணிக நிலையங்களே இவ்வாறான சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாகியுள்ளன.
நுகர்வோர்கள் சரியான முடிவுகளை எடுப்பதற்கும், நியாயமற்ற விலை நிர்ணய நடைமுறைகளைத் தடுப்பதற்கும் விலை வெளிப்படைத்தன்மை அத்தியாவசியமானது என நுகர்வோர் விவகார அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது.
மேலும், இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களால் உணவு நச்சுத்தன்மை அல்லது ஒவ்வாமை போன்ற சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில், விநியோகச் சங்கிலியைக் கண்டறிந்து பொறுப்புக் கூறுவதை உறுதி செய்வதற்கு இறக்குமதியாளர் விபரங்கள் மிகவும் முக்கியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விற்பனைக்கு வைக்கப்படும் அனைத்துப் பொருட்களிலும் விலைகள் தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்றும், இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் இறக்குமதியாளரின் பெயர், முகவரி, தொடர்பு விபரங்கள் மற்றும் உரிய விதிமுறைகளின் கீழ் வரவிருக்கும் ஏனைய விபரங்கள் அடங்கியிருக்க வேண்டும் என்றும் வணிகர்களுக்கு அதிகாரசபை நினைவூட்டியுள்ளது.
நுகர்வோர்கள் ஏதேனும் அநீதிகள் அல்லது சட்டமீறல்கள் தொடர்பில் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்குத் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.