சிறைபிடிக்கப்பட்ட எண்ணெய் கப்பல் ; இலங்கை மாலுமியை மீட்க நடவடிக்கை
சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் எண்ணெய் கப்பலில் உள்ள இலங்கை மாலுமியை பாதுகாப்பாக மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு எத்தியோப்பியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்துக்கு வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
சோமாலிய அதிகாரிகளுடன் இணைந்து, குறித்த இலங்கை மாலுமியை நாட்டுக்கு அழைத்து வருவது குறித்து கலந்துரையாடுமாறு எத்தியோப்பியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோமாலியாவின் புன்ட்லேண்ட் கடற்கரைக்கு அப்பால் குறித்த எரிபொருள் கப்பல் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தக் கப்பலில் இலங்கையர் ஒருவருடன் பாகிஸ்தான், இந்தியா, இந்தோனேசியா மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாலுமிகளும் பணியாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கப்பலில் உள்ள பணியாளர்களுக்குக் காயம் ஏற்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும், சம்பவம் குறித்த மேலதிக உறுதியான தகவல்கள் அமைச்சுக்கு இன்னும் கிடைக்கப்பெறவில்லை.
தற்போது குறித்த கப்பலுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, மாலுமிகளின் நிலைமையை மதிப்பிடுவதற்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கும் அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.