கைதான பெண்களிடம் உயரதிகாரிகள் செய்த கீழ்த்தரமான செயல் ; நீதிமன்றம் வழங்கிய அதிரடி தண்டனை
ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட பெண்கள் இருவருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பதற்கு அவர்களிடமிருந்து ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக்கொள்வதற்கு முயற்சித்த சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்பட்ட மது வரித் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர்கள் இருவருக்கு 28 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் வெள்ளிக்கிழமை (23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன் பிரதிவாதிகள் இருவருக்கும் அந்த தண்டனையை 7 வருடங்களில் அனுபவிக்குமாறு நீதிபதி இதன்போது உத்தரவு பிறப்பித்தார்.
போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு
2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பெண்கள் இருவர் மதுவரி திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த சந்தேகநபர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாது இந்தக்குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை விடுவிக்கும் வகையில் செயற்பட்டமை தொடர்பில் மதுவரி திணைக்களத்தின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் கட்டுப்பாட்டாளர் இருவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, பிரதிவாதிகள் தரப்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி தமது சேவைபெருநர்களுக்கு சிறு வயதில் பிள்ளைகள் இருப்பதாகவும் அவர்களது குடும்பங்கள் இவர்களை நம்பியே இருப்பதாகவும் குறிப்பிட்டார். எனவே பிரதிவாதிகளுக்கு இலகு தண்டனை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இதன்போது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி இலஞ்சம் மற்றும் ஊழல் ஆகியவை சமூகத்திலிருந்து ஒழிக்கப்பட வேண்டியவை எனவும் பிரதிவாதிகளுக்கு சட்டத்தில் உள்ள அதிகபட்ச தண்டனை வழங்குவது சமூகத்துக்கு முன்மாதிரியாக அமையும் எனவும் சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து இரு தரப்பு வாதங்களை கருத்திற்கொண்ட நீதிபதி திறந்த மன்றில் பிரதிவாதிகள் இருவரும் போதைப்பொருள் பாவனை தடுப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய அதிகாரிகளாவர்.
எனினும் இவர்கள் தமது கடமையை புறக்கணித்து போதைப்பொருள் பாவனையை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர். இவர்களுக்கு இலகு தண்டனை வழங்க முடியாது. அவ்வாறு நடந்து கொண்டால் இதுபோன்ற தவறுகளை செய்பவர்களுக்கு இது தவறான முண்ணுதாரணமாக அமைந்து விடும். எனவே பிரதிவாதிகளுக்கு சட்டத்தில் உள்ள அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டி நீதிபதி தனது தீர்ப்பை அறிவித்தார்.
இதற்கமைய பிரதிவாதிகளுக்கு 28 வருட கடுழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிப்பததுடன் அதனை 7 வருடங்களில் அனுபிக்குமாறும் உத்தரவு பிறபித்தார். மேலும் ஒவ்வொருவருக்கும் தலா 20 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதித்தும் அதனை செலுத்த தவறும் பட்சத்தில் மேலதிக ஒரு வருடம் சிறைத்தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.
மதுவரித் திணைக்களத்தின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் சுரங்க சந்தருவன் மற்றும் சிசிர குமார சில்வா ஆகிய அதிகாரிகளுக்கு எதிராக இந்த வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.