பாலியல் கையூட்டல் கோரிய அதிகாரிக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை
ஏழு வயதுடைய சிறுமி ஒருவருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரண நிதிக்கான அனுமதியை வழங்குவதற்காக அவரின் தாயிடம் பாலியல் கையூட்டல் கோரிய திவிநெகும அபிவிருத்தி அதிகாரி ஒருவருக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.
குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பிரதிவாதியின் வாக்களிக்கும் உரிமை உள்ளிட்டவை நீக்கப்படுவதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறியப்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாலியல் கையூட்டல் பெறும் நோக்கில் குறித்த தாயை திஸ்ஸமஹாராம பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றுக்கு அழைத்த நிலையில் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் அவருக்கு 20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. தமது தீர்ப்பை அறிவித்த நீதிபதி, பிரதிவாதி ஒரு அரச அதிகாரியாக தமது பொறுப்பை நிறைவேற்றுவதற்காகப் பாதிப்படைந்துள்ள பெண் ஒருவரிடம் பாலியல் கையூட்டல் கோரியதை எந்த சந்தர்ப்பத்திலும் ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
குற்றத்தின் தன்மையைக் கருத்திற் கொண்டு சிறிய அளவான தண்டனையை அறிவிக்க முடியாது எனவும் அதற்கமைய அவருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிபதி அறிவித்தார்.