ஒடிஸி ரயில் ஆசன முன்பதிவில் முரண்பாடு ; கடும் அசௌகரியத்தில் பயணிகள்
கொழும்பு மற்றும் பதுளை இடையேயான எல்ல ஒடிஸி ரயிலில், சுற்றுலாப் பயணிகளின் தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது வெளிநாட்டுக் கடவுச்சீட்டு இலக்கத்தை உள்ளிடாமல் ஆசன முன்பதிவு செய்யப்பட்டதால், சுற்றுலாப் பயணிகளுக்கு ரயிலில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டு, வெற்று ஆசனங்களுடன் ரயில் பயணித்ததாக சுற்றுலா வழிகாட்டிகள் தெரிவித்தனர்.
இதனால், நானுஓயாவிலிருந்து எல்ல நோக்கிச் செல்லும் பயணிகள் இன்று (11) கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
அமைதியின்மை
மேலும், நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள், ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகளுடன் முரண்பட்டதால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது இலங்கை சுற்றுலாத் துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
ரயில் பயணச்சீட்டுகளை வாங்கி, வெளிநாட்டவர்களுக்கு அதிக விலைக்கு விற்கும் மோசடி நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும், இதனைத் தடுக்க, ரயில் ஆசனங்களை முன்பதிவு செய்யும்போது பயணிகளின் தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது வெளிநாட்டுக் கடவுச்சீட்டு இலக்கத்தை உள்ளிடுவது கட்டாயமென இலங்கை ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த விதிமுறையால் இச்சிக்கல் எழுந்ததாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால், இன்று எல்ல ஒடிஸி ரயிலில் பயணிக்க முடியாத வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், நானுஓயா ரயில் நிலையத்தில் மீண்டும் 300 ரூபாய்க்கு சாதாரண பயணச்சீட்டு பெற்று, கண்டியிலிருந்து எல்ல வரை செல்லும் போடி மெனிகே ரயிலில் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.
எனினும், இணையதளங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் மூலம் நானுஓயாவிலிருந்து எல்ல நோக்கிப் பயணிக்க 6,000 ரூபாய்க்கு மேல் செலுத்தி ஆசனங்களை முன்பதிவு செய்தும், அமர்ந்து பயணிக்க முடியாததால், சுற்றுலாப் பயணிகள் கடும் அதிருப்தி வெளியிட்டனர்.
மேலும், பாதுகாப்பற்ற வகையில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ரயிலின் மிதிபலகையில் நின்றவாறு பயணித்தது குறிப்பிடத்தக்கது.