நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் (89) உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரச அரண்மனை தெரிவித்துள்ளது.
இரத்தத்தில் ஏற்பட்ட பக்ரீயா தொற்று (bacterial infection) காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐந்தாம் ஹரால்ட்டின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும், அவரது குடும்ப உறுப்பினர்கள் பல மணி நேரம் மருத்துவமனையில் உடனிருப்பதாகவும் அரண்மனை தெரிவித்துள்ளது.

பயணங்கள் ரத்து
இதற்கிடையே, இளவரசர் ஹாகோன் மற்றும் ராணி சோஞ்சா ஆகியோர் தங்களது பயணங்களை ரத்து செய்துள்ளனர்.
மன்னரின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்துள்ள பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர், ஜெர்மனி பயணத்தை ரத்து செய்துள்ளார்.
மேலும், நாடாளுமன்ற சபாநாயகர் மசூத் கராகான்கனி ஐஸ்லாந்து பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு நாடு திரும்பியுள்ளார்.
1991 முதல் நோர்வேயின் அரசராகவும் ஐரோப்பாவின் மிகவும் வயதான வாழும் மன்னராகவும் திகழும் ஹரால்ட், வயது முதிர்வு காரணமாக கடந்த 2024-ல் தனது அதிகாரப்பூர்வ நிகழ்வுகளைக் குறைத்துக் கொண்டார்.
என்றபோதிலும், தனது வாழ்நாள் முழுவதும் மன்னராகவே நீடிப்பேன் என்றும் பதவி விலகப் போவதில்லை என்றும் உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.