வடக்கில் கொட்டித்தீர்க்கும் மழை; பரீட்சைக்கு செல்லமுடியாது மாணவர்கள் தவிப்பு
மாரிகாலம் ஆரம்பித்துள்ள நிலையில் வடமாகாணத்தில் ஒரு வாரமாக பெய்து வரும் அடைமழை நேற்று (25) காலை முதல் மழை மேலும் அதிகரித்தது. இந்நிலையில் நேற்றையதினம் கா.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு ஆரம்பமான நிலையில் மாணவர்கள் பெரிதும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
இதனையடுத்து மாணவர்களின் பரீட்சை நிலையங்களுக்கு உரிய நேரத்தில் அழைத்து செல்லும் நடவடிக்கையை இராணுவ அதிகாரிகள் மற்றும் வடக்கு பகுதி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
தகவல் தொடர்பு துண்டிப்பு
வீதிகள் அழிந்தும், பாலங்கள் உடைந்தும் கிடப்பதால் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையிலான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட கடினமான சூழலில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் உடைந்து வெளியேறும் நீர் , பாலத்தின் மீது பாய ஆரம்பித்ததால் முல்லைத்தீவுக்கான பாதை மூடப்பட்டுள்ளது. வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாகாணங்களில் உள்ள நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதால் பாதைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ., கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையிலான தொடர்பு முறிந்துவிட்டது.
மக்கள் கடும் சிரமம்
வவுனியாவில் உள்ள பேராறு நீர்த்தேக்கம் நிரம்பி வழியும் மட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதன் இரண்டு பிரதான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. பல வீடுகளில் வெள்ளம் புகுந்ததனால், அக்கிராமங்களில் வசிப்பவர்களுக்கு தேவையான பொருள்கள் வாங்க முடியாமல் உள்ளது.
இந்த சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 25ஆம் திகதி காலை வரை யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாகாணங்களில் சுமார் பத்தாயிரம் குடும்பங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.
இராணுவம், அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள், பொலிஸ், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களின் உத்தியோகத்தர்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்திருந்தனர்.
அதேசமயம் பெருமழையினால் விவசாய நிலங்களும், மாடு, ஆடு, கோழி என ஏராளமான பண்ணை விலங்குகளும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.