இலங்கையில் போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு மன்னிப்பே கிடையாது ; நீதி அமைச்சர்
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மஹர சிறைச்சாலை வளாகத்தில் இன்று காலை (1) நடைபெற்ற, சிறைச்சாலைகளுக்குள் அவசரகால மோதல் சூழல் ஏற்படும் பட்சத்தில் விரைவாகப் பதிலளிப்பதையும், கைதிகளின் நலனைச் சீரமைப்பதையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்ட கூட்டுச் செயல்முறை குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றபோது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள்
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பில் அரசாங்கம் எந்த வித சமரசத்துக்கும் இடமளிக்காது எனவும், இவர்கள் எவருக்கும் எந்தச் சூழ்நிலையிலும் மன்னிப்பு வழங்கப்படாது எனவும் அவர் உறுதியளித்தார்.
கடந்த காலங்களில் பாரிய பிரச்சினையாக இருந்த அரச பகுப்பாய்வாளர் அறிக்கைத் தாமதத்துக்குத் தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது.
புதிய ஆட்சேர்ப்புகள் மூலம் இரவு 10 மணி வரை அதிகாரிகள் பணியில் ஈடுபட்டு வருவதுடன், கடந்த ஒகஸ்ட் மாதத்தில் மட்டும் 9,081 அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் நிலுவையில் உள்ள அனைத்து அறிக்கைகளையும் வழங்குவதே அரசாங்கத்தின் இலக்காகும்.
இதேவேளை, அவசர சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வகையிலும், கைதிகளின் நலன்புரிச் சேவைகளை மேம்படுத்தும் நோக்கிலும் முப்படை, காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பங்களிப்புடன் தற்போது 15 சிறைச்சாலைகளில் பலமான கூட்டுப் பொறிமுறை செயற்படுத்தப்பட்டுள்ளது.
சிறையில் உள்ள அனைவரும் குற்றவாளிகள் அல்ல எனவும், ஒரு கண நேரத் தவறால் அங்குள்ள கைதிகளுக்குச் சமூகத்தில் இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர், விடுதலையாகிச் செல்வோரைச் சிறந்த குடிமக்களாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றார்.
இதனிடையே, கடந்த நாட்களில் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் நிலைமையால் தீயிட்டு அழிக்கப்பட்ட பிரதான சிறைக்காவலர் அலுவலகம், புனர்வாழ்வு பிரிவு மற்றும் ஏனைய பகுதிகளை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டதுடன், விளக்கமறியல் கைதிகளின் குறைகளையும் கேட்டறிந்தார்.