நாமலின் செயலாளரின் வீட்டில் இரவிரவாக தேடுதல் நடவடிக்கை ; குவிக்கப்பட்ட அதிகாரிகள்
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றும் சஞ்சய் சமரசிங்கவிற்குச் சொந்தமான கல்கிசையில் உள்ள வீட்டை,இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்கள் விசாரணை ஆணைக்குழு, பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை என்பன இணைந்து விசேட தேடுதல் சோதனைக்கு உட்படுத்தியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே குறிப்பிடுகையில், நேற்று (16) இரவு 10.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சோதனை நடவடிக்கையானது இன்று (17) அதிகாலை 4.30 மணி வரை தொடர்ச்சியாக ஆறு மணித்தியாலங்களுக்கு மேல் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

இதன்போது, வீட்டை முழுமையாகச் சோதனையிட்டு சாட்சியங்களைத் திரட்டுவதுடன், வீட்டுப் பகுதியில் உள்ளவர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துகொள்ளவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த அவசரச் சோதனையை மேற்கொள்வதற்கான உண்மையான காரணம் அல்லது அதற்கான சட்டப் பின்னணி தொடர்பில் சம்பந்தப்பட்ட விசாரணை நிறுவனங்களால் உத்தியோகபூர்வமாக எந்தவொரு அறிவித்தலும் அல்லது விளக்கமும் இதுவரை வழங்கப்படவில்லை என சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.